கொழும்பு இயங்கும் தனியார் ஹொட்டல் ஒன்றில் தமிழ் மொழியில் பேசக் கூடாது என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு 7 இயங்கும் தனியார் ஹொட்டல் ஒன்று தன்னுடைய ஊழியர்களை தமிழில் பேச வேண்டாம் என்று தடை செய்திருக்கிறது. இது தொடர்பில் அந்த ஹொட்டலில் ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பலகையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“அனைத்து ஊழியர்களும் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மாத்திரமே பேசவேண்டும். கண்டிப்பாக தமிழில் பேசக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தப் அறிவிப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருவதுடன் கண்டனத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

இதுபெரும் சர்ச்சையாக உருவெடுக்கவே, “ எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இதை நாம் செய்தோம் . தமிழ் மொழியில் ஊழியர்கள் கதைக்கும் போது அது வாடிக்கையாளரை கிண்டல் செய்வது போல தாங்கள் உணர்வதாக கூறியுள்ளார்கள். இதனால் தான் இந்த அறிவிப்பை வைத்தோம் ” என்று அந்த ஹொட்டல் இது தொடர்பில் விளக்கம் கொடுத்திருக்கிறது.

எனினும் இது தொடர்பில் கடும் கண்டனங்களை இணையவாசிகள் வெளிப்படுத்திவருகின்றார்கள்.