நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை விரைவில் தீரும் – ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!!

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் குறித்தும் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் நேற்று ஆரம்ப கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான பிரச்சினையை விரைவில் தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (16) காலை சியம்பலாண்டுவ பிரதேச செயலக பிரிவில் ரத்துமட, வீரகந்தவல ஆகிய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பயிர்ச்செய்கைகளை நேரில் பார்வையிட்டார்.

 

Related Posts