அன்று காலை சரியாக 11.30 மணி இருக்கும், தனது Vauxhall Vectra காரில் பயணித்துக் கொண்டு இருந்தார், லோனா பால் என்ற தாய். காரின் முன் ஆசனத்தில் 7 வயது நிரம்பிய தம்பி. பின் ஆசனத்தில் கியாரா என்ற அழகான சிறுமி (09) அமர்ந்து இருந்தார். திடீரென காரை ஓட்டிச் சென்ற தாயார், களைப்பில் ஒரு செக்கன் தூங்கி விட்டார். அவ்வளவு தான், அவர்களது கார் ரேஞ் ரோவர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் பின் ஆசனத்தில் அமர்ந்து இருந்த கியாரா என்ற 9 வயது சிறுமி பிழைக்க மாட்டார் என்று வைத்தியர்கள் கூறினார்கள்.
இதேவேளை மக்ஸ் ஜோன்சன் என்னும் 14 வயதுச் சிறுவன், இதயக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில், சாகக் கிடந்தான். இன்றோ நாளையோ தாம் இறந்து விடுவோம் என்ற மரண பயத்தில் மக்ஸ் ஜோன்சன் இருந்தான். புது இதயம் கிடைப்பது என்பது, அவ்வளவு இலகுவான காரியம் இல்லை. ஆனால் நம்பிக்கையை அவன் இழக்கவில்லை. இன் நிலையில் தான், எப்பவுமே சிரித்த முகத்துடன் இருக்கும் கியாரா மரணப் படுக்கையில் இருந்தார். அவர் பிழைக்க மாட்டார் என்று அறிந்த தாயார், கியாராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவிக்கவே… உடனே வைத்தியர்கள் கியாராவின் இதயத்தை அறுவை சிகிச்சை செய்து, வெளியே எடுத்து மக்ஸ் ஜோன்சனுக்கு பொருத்தினார்கள். இதில் சில சட்டச் சிக்கல் இருந்தது.
இருப்பினும் ஏகோபித்த மீடியா ஆதரவும் மக்கள் ஆதரவும் மக்ஸ் ஜோன்சன் பக்கம் திரும்பியதால், பிரித்தானிய அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. தனக்கு இதயத்தை தந்த கிளாராவின் குடும்பத்திற்கு நன்றி மட்டும் சொல்லவில்லை மக்ஸ் ஜோன்சன். மாறாக NHS க்கும் உதவ நினைத்தான். தன்னைப் போல இப்படி நோயால் பீடித்துள்ள பல லட்சம் பேருக்கு உதவும் NHS க்கு ஏதாவது செய்யவேண்டும் என்று கருதி, பெரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஜோன்சன், 500,000 ஆயிரம் பவுண்டுகளை திரட்டி British Heart Foundationக்கு கொடுத்துள்ளான். இதனைப் பாராட்டி, நாட்டின் சிறந்த குடி மகன் என்ற விருதை, பிரித்தானிய அரசு ஜோன்சனுக்கு வழங்கியுள்ளது. இதனை தான் விதி என்பார்களோ தெரியவில்லை. அன்று அந்த தாய் ஒரு செக்கன் உறங்கவில்லை என்றால்….