சிங்களவர் சுட்டது போல கமுக்கமா இந்திய மீனவரை சுட்ட இந்திய கடல்படை- பெரும் அதிர்ச்சி !

நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று முதலில் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது சுட்டது இந்திய கடற்படைதான் எனத் தெரியவந்துள்ளதால் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக்கூறி அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்களை அடித்து உதைத்து படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று சிறையிலடைப்பதும் வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுபவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர், பிரதமருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதுவதும், நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாகவே நடந்து வருகிறது. கோடியக்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு படகில் வந்த மர்ம நபர்கள் சிலர் இவர்கள்மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது.இதில் மயிலாடுதுறை மாவட்டம், மானகிரி பகுதியைச் சேர்ந்த வீரவேல் (30) என்ற மீனவரின் இடது கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது.

இதனையடுத்து இந்திய கடற்படையினர்தான், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல்கள் பரவின. அதை இந்திய கடற்படை அதிகாரிகள் முதலில் மறுத்தனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது தாங்கள்தான் என இந்தியக் கடற்படை ஒப்புக்கொண்டு, சுட்டது ஏன் என்பது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், ” இந்தியா- இலங்கையை பிரிக்கும் பாக் ஜலசந்தி கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லை கோட்டிற்கு அருகில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று காணப்பட்டது.

பலமுறை எச்சரித்தும் படகு நிற்கவில்லை. வழக்கமான நடைமுறைகளின்படி எச்சரிக்கை மீறி சென்றதால் துப்பாக்கியால் சுடப்பட்டது. காயமடைந்த நபருக்கு கப்பல் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவ ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts